இரட்டை அர்த்த வசனம் பேசியதாக புகார் – பாலியல் சிக்கலில் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர்

சென்னை கே.கே.நகரில் செயல்பட்டு வரும் PSBB பள்ளி ஆசிரியர், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக புகார் எழுந்த நிலையில், பள்ளி நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்டு, பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கொரோனா சூழலில் பள்ளிகளில் ஆன்லைன் மூலமாக மட்டும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள் பெரும்பாலானோர் மாணவர்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி அக்கறையுடன் பாடம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஒட்டு மொத்த ஆசிரியர்களின் நற்பெயரை கெடுக்கும் விதத்தில், சென்னையை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் தரக்குறைவாக நடந்துகொண்ட விவகாரம், வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னை கே.கே.நகர். பத்ம சேஷாத்ரி பள்ளியில், வணிகவியல் ஆசிரியராகப் பணியாற்றி வரும் ராஜகோபாலன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. மேலும், ஆசிரியர் ராஜகோபாலன், அரைகுறை ஆடையுடன் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதாகவும், இரட்டை அர்த்த வசனத்தில் பேசுவதாகவும் புகார்கள் எழுந்தன.

ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அசோக் நகர் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். குழந்தைகள் மற்றும் பெண்கள் குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார்.எனினும், விசாரணைக்கு பள்ளி நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, விவகாரம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியதால், ஆசிரியர் ராஜகோபாலனை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த நிலையில், மாணவிகளுக்கு, ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக, பத்ம சேஷாத்ரி பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு, பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது

Exit mobile version