ஆன்லைன் வகுப்புகளின் போது மாணவிகளை ஆபாசமாக படம் பிடித்ததாக பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ராஜகோபாலனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை கேகே நகர் பத்ம சேஷாத்ரி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 3 நாள் காவலில் எடுத்த போலீசார் ராஜகோபாலனிடம் 250 கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கும்படி தெரிவித்தனர். விசாரணையில், ராஜகோபாலன் மாணவிகளை ZOOM செய்து, ஆபாசமாக புகைப்படம் எடுத்து ரசித்தது தெரியவந்தது. இரண்டு நாட்களில் கிடைக்கப்பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் ராஜகோபாலன் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்த விதத்தையும், 5 மாணவிகளிடம் இருந்து பெற்ற ஒவ்வொரு வாக்குமூலத்தையும், தனித்தனிகுற்றப்பத்திரிக்கையாக தாக்கல் செய்ய இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜகோபாலனை இன்று மாலை 3 மணி வரை விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றவுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், கீழ்பாக்கத்தில் உள்ள மாநில குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணைய அலுவலகத்தில், பத்ம சேஷாத்ரி பள்ளி முதல்வர் கீதா மற்றும் தாளாளர் ஷீலா ஆகியோர் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.