பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீது முன்னாள், இந்நாள் மாணவிகள் ஏராளமானோர் புகார்

பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீது முன்னாள், இந்நாள் மாணவிகள் ஏராளமானோர் காவல்துறை துணை ஆணையரிடம் வாட்ஸ் ஆப் எண்ணில் புகார் அளித்துள்ளனர்.

சென்னை கே.கே. நகரில் பத்மா சேஷாத்ரி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், 5 ஆண்டுகளுக்கு மேலாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாக கூறப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிகள் தாமாக முன் வந்து புகார் அளிக்கலாம் என்றும், புகார் அளிக்கும் மாணவிகளின் ரகசியம் காக்கப்படும் என்றும் காவல்துறை கூறியது.

துணை ஆணையரின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என சமூக வலைதளங்களில் எண் பகிரப்பட்டது.

இதையடுத்து அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள், தற்போது படித்துக்கொண்டிருக்கும் மாணவிகள் என ஏராளமானோர் வாட்ஸ் ஆப்பிலும், போன் செய்தும் புகார்களை கூறி வருகின்றனர்.

ஒவ்வொருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு, தனித்தனி வழக்காக பதிவு செய்யப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பள்ளியின் தாளாளர் ஷீலா ராஜேந்திரன், முதல்வர் கீதா 5 மணிக்குள் துணை ஆணையர் அலுவலகத்தில் ஆஜராக வேண்டுமென காவல்துறை சம்மன் அனுப்பியது.

ஆன்லைன் வகுப்பு எடுக்கும்போது ஆசிரியர் ராஜகோபாலன் அரைகுறை ஆடையுடன் இருந்ததையும், அநாகரீகமான குறுஞ்செய்திகளை அனுப்பியதையும் பள்ளி நிர்வாகம் ஏன் கண்காணிக்கவில்லை விளக்கம் கேட்கப்பட்டது.

இதனையடுத்து அசோக் நகர் காவல்நிலையத்தில் இருவரும் ஆஜராகினர். இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

பள்ளியின் முதல்வர், நிர்வாகி, குறுஞ்செய்தியை முதன்முதலாக பதிவேற்றம் செய்த கிரிபாலி, முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர், ஜூன் 4ம் தேதி காலை 11 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

குழந்தைகள் பாதிக்கப்பட்டது தொடர்பான அனைத்து விவரங்களையும் சேகரித்து அறிக்கையாக அனுப்பும்படி கே.கே.நகர் மகளிர் காவல்துறைக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

 

Exit mobile version