அரசு வேளாண்மை விரிவாக்க மையத்தில் வழங்கப்பட்ட நெல் விதைகள் முளைக்காமல் போனதற்கு, திமுக அரசின் அலட்சியப்போக்கே காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான், மற்றவர்கள் சோற்றில் கை வைக்க முடியும் என்பதை உணர்ந்து கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள், சலுகைகள் அளித்து அவர்களின் வாழ்க்கையில், நிரந்தர ஒளி ஏற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அதிமுக அரசு விவசாயிகள் மீது காட்டிய அக்கரையால் கடந்த 10 ஆண்டுகளில் தமிழக அரசு வேளாண் துறையில் அகில இந்திய அளவில் பல்வேறு விருதுகளை பெற்று சாதனை படைத்ததை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டி இருக்கிறார்.
அதிமுக ஆட்சியில் வேளாண் துறையில் பெறப்பட்டு இருக்கும் விருதுகளை பட்டியலிட்டுள்ள அவர், காவிரி டெல்டா பகுதிகளில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில், 32 புள்ளி 41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை படைத்து இருப்பதை பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
ஆனால் திமுக அரசின் அலட்சியப்போக்காலும், அஜாக்கிரதையாலும் விவசாயிகள் பெரிதும் வேதனை அடைந்துள்ளார்கள் என்பது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியில் குற்றச்சாட்டு.
தஞ்சை மாவட்டம் வரகூரைச் சேர்ந்த விவசாயி வீரமணி, செந்தலை வேளாண்மை விரிவாக்க மையத்திலிருந்து வாங்கிய கோ 51 ரக விதை நெல் முளைக்கவில்லை என்று தெரிவித்து இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டி இருக்கும் அவர், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு புதிய நெல்விதைகளை இலவசமாக வழங்க வேண்டும் என்றும், வீணாகிய விதை நாற்றுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருக்கிறார்.
இதேபோன்று வேறு எங்கேனும் நடந்துள்ளதா என்பதை திமுக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தரமான விதை நெல்களை தமிழக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.