முன்மாதிரி மாவட்டமாக மாற இருக்கிறது சிவகங்கை

தமிழக முதல்வரின் குடிமராமத்து திட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருவதன் மூலம், நீர் மேலாண்மையில் தமிழகத்தின் முன்மாதிரி மாவட்டமாக மாற இருக்கிறது சிவகங்கை.

வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் சிவகங்கை மாவட்டத்தில், வைகையாறு, பெரியாறு, குண்டாறு, பாலாறு, உப்பாறு, பாம்பாறு,தேனாறு, விருசுழி ஆறு,மணிமுத்தாறு போன்ற 10 ஆறுகள் ஓடுகின்றன.

ஆனாலும், பருவமழை சரியாக பெய்யாத காரணத்தால் இம்மாவட்டம் கடுமையான வறட்சியை சந்தித்து வருவதோடு விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வைகையாற்றின் மூலமும், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமும் கிடைக்கக் கூடிய நீரைக் கொண்டு மாவட்ட நிர்வாகம், ஓரளவு குடிநீர் தட்டுப்பாட்டை சமாளித்து வருகிறது.

மழை காலத்தில் கிடைக்கக்கூடிய நீரை முழுமையாகப் பயன்படுத்தி, அதன் மூலம் வறட்சியை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் முழு மூச்சில் களமிரங்கியுள்ளது.

இதற்கான முதற்கட்டமாக, 20 ஜேசிபி இயந்திரங்கள் மாவட்ட நிர்வாகத்தால் சொந்தமாக வாங்கப்பட்டு பிரதான ஆறுகளின் வழித்தடங்கள், அதனுடைய உபரிகால்வாய்கள் கண்டறியப்பட்டு, அதன் கரைகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து திட்ட பணியின் மூலமும், சிவகங்கை மாவட்ட பொதுப்பணித் துறையின் மூலமும் 110 ஏரிகள், 38 கோடி ரூபாய்
மதிப்பீட்டில் தூர்வாறும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது வரை 30 பாசன ஏரிகளை தூர்வாறும் பணிகள் முழுமையாக
முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பாசன ஏரிகளில் உள்ள பணிகள் முழுவதும் இன்னும் பத்து தினங்களில் முடிவடையும் என மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கிறது

தன்னார்வலர்கள், விவசாயிகள் ஆகியோர்கள் உதவியோடு நடைபெறக்கூடிய, தமிழக முதலமைச்சர் அவர்களின் குடிமராமத்து பணிகள் மூலம் சிவகங்கை மாவட்டம் நீர் மேலாண்மையில், தமிழ் நாட்டிலேயே ஒரு சிறந்த முன் மாதிரியான மாவட்டமாக மாறும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

Exit mobile version