அரசை கண்டித்து விவசாயிகள் வாய், வயிற்றில் கருப்பு துணி கட்டி போராட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசால் கொள்முதல் செய்யப்பட்ட நான்காயிரம் நெல் மூட்டைகள் வீணான நிலையில், கொள்முதல் செய்யப்படாத நான்காயிரம் நெல் மூட்டைகளை அரசு அதிகாரிகள் எடுத்து சென்றதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நெமிலி அடுத்த சிறுவளையம் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அவற்றை உரிய நேரத்தில் எடுத்து செல்லாமல் கொள்முதல் நிலையத்திலேயே பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக மழை மற்றும் வெயிலில் சிக்கி அனைத்து நெல் மூட்டைகளும் சேதமடைந்து வீணாகியுள்ளது.

இதனிடையே புதிதாக சுமார் நான்காயிரம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்காக விவசாயிகள் கொண்டு வந்து வைத்திருந்தனர்.

அவற்றை இரவோடு இரவாக அதிகாரிகள் எடுத்து சென்றுவிட்டதால் விவசாயிகள் கடும் அதிர்க்குள்ளாகியுள்ளனர்.

முறையாக கொள்முதல் செய்யாமல், ரசீது எதுவும் வழங்காத நிலையில் நெல் மூட்டைகள் எடுத்து சென்றது குறித்து உரிய பதிலை அதிகாரிகள் தெரிவிப்பது இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அரசு அதிகாரிகளின் அலட்சியத்தை கண்டித்தும், மெத்தனமாக செயல்படும் அரசை கண்டித்தும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வாய் மற்றும் வயிற்றில் கருப்பு துணி கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Exit mobile version