மூணாறு அருகே தமிழர்கள் அதிகளவில் தோட்ட வேலை செய்யும் பணிகளில் சரியான வசதி செய்து தரக்கோரி, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கேரள மாநிலம், மூணாறு அருகே இடமலைகுடி, ஆண்டவன் குடி, செட்டிக்குடி, நூறடிகுடி என 24 கிராமங்களில் ஆதிவாசி மக்கள் வசிக்கின்றனர். தமிழர்கள் தங்கியிருந்து தோட்டப்பணிகளில் ஈடுபடுகின்றனர். இதனிடையே இப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைக்கு சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மூணாறுக்கு, 4 மணி நேரம் பயணித்து செல்லும் நிலை உள்ளது. இப்பகுதி கரடுமுரடான கற்கள் நிரம்பிய மலைவழிப்பாதையாக இருப்பதால், வாகனங்கள் இயக்கப்படுவதில் சிரமம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதேபோல இச்சாலையில் 7 வருடங்களுக்கு முன்பு புல்லுமேடு என்ற பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் பணிகள் முடிவடையாமல் நிற்பதால் அவசர காலத்தில் நோயாளிகளையும், கர்ப்பிணிகளையும் கீழே இறக்குவதற்கு மிகவும் சிரமப்படுவதாகவும்,எனவே உரிய சாலை வசதி செய்து தரக்கோரியும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.