நச்சு வாயு வெளியேற்றத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கும் தொழிற்சாலைகளில் நச்சு வாயு வெளியேறுவதை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. வருகிற 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளின்படி தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசின் தளர்வுகளை பின்பற்றும் தொழிற்சாலைகள், மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு உபகரணங்கள் நல்ல முறையில் இயங்குவதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் திறக்கப்படும் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் நச்சு வாயுக்களை திறமையான ஊழியர்களை கொண்டு கையாள்வதை உரிமையாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை மனிதர்கள் மூலம் சுத்தப்படுத்தாமல் இயந்திரங்கள் மூலம் சுத்தப்படுத்த வேண்டும் என்றும், அதனை கையாளும் ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உடைகள் வழங்குவதோடு அதுகுறித்த உரிய தகவல்களையும் அளிக்க வேண்டும் என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Exit mobile version