சபரிமலை விவகாரத்தை தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசக்கூடாது என கேரள அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்கு செல்லலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அனுமதி அளித்தது. இந்த தீர்ப்புக்கு பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து சபரிமலை விவகாரம் கேரளாவில் புயலை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தான் கேரளாவில் மக்களவை பிரச்சாரத்தின் போது சபரிமலை பற்றிய விவகாரங்களை எந்த அரசியல் கட்சியும் எடுக்கக்கூடாது என கேரள மாநில தலைமை தேர்தல் அதிகாரி ராம் மீனா தெரிவித்துள்ளார். சபரிமலை விவகாரத்தை முன் வைத்து பிரச்சாரம் செய்வது மத ரீதியாக நடத்தை விதிமுறைகளை மீறும் குற்றமென்றும், எனவே, இதுகுறித்து பேசினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.