அமமுகவை கட்சியாக பதிவு செய்ய தடை கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்கக்கோரி அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி தொடர்ந்த வழக்கில் டி.டி.வி தினகரன் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமமுக என்ற பெயரில் கட்சி தொடங்கிய தினகரன், அக்கட்சியை பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தின் மீது தேர்தல் ஆணையம் இதுவரை எந்த முடிவும் எடுக்காத நிலையில், அக்கட்சியில் இருந்து விலகிய முன்னாள் நிர்வாகி புகழேந்தி அமமுகவை பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தேர்தல் ஆணைய விதிப்படி ஒரு கட்சியை பதிவு செய்ய அக்கட்சியின் சார்பில் 100 தனி நபர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறையின் அடிப்படையில், தான் உட்பட மொத்தம் 100 பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். பின்னர், தினகரனின் நடவடிக்கையில் உடன்பாடின்றி, தான் உட்பட முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் என பலரும் அமமுகவில் இருந்து விலகி விட்டதால், கட்சியை பதிவு செய்ய அளித்த விண்ணப்பத்தை தள்ளுபடி செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

கட்சிக்கு உள்கட்சி விதிகளை உருவாக்காமலும், பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, நிர்வாகிகளை தேர்ந்தெடுக்காமலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டவிதிகளை தினகரன் மீறிவிட்டதாகவும், தன்னை பொதுச்செயலாளர் என பிரகடனம் செய்து கொண்டதுடன், தனது விருப்பபடி, நிர்வாகிகளை நியமித்துள்ளதாகவும் புகழேந்தி மனுவில் கூறியிருந்தார்.

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை பதிவு செய்ய தினகரன் பல்வேறு வகையில் முயற்சி செய்து வருவதால், அமமுகவை பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டுமென கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தநிலையில், வழக்கு தொடர்பாக டி.டி.வி தினகரன் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு வழக்கு விசாரணை வரும் 9ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

Exit mobile version