சாத்தான்குளம் வழக்கு விசாரணையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை சிபிஐக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
சாத்தான்குளத்தில் தந்தை – மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணை அறிக்கையை, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தாக்கல் செய்தது. அதே சமயம், தடயவியல் மற்றும் அறிவியல் சம்பந்தமான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐ கால அவகாசம் கோரியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக விசாரணையில் தாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்ட சிபிஐயின் விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் சிபிஐ-யின் விசாரணை திருப்தி அளிப்பதாக தெரிவித்தனர். மேலும், குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக, உயர் மட்ட குழு அமைப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.