அரசு ஊழியர்களுக்கு கொரோனா காலத்தில் கூட சலுகைகள் குறைக்கப்படவில்லை – நீதிபதி சுரேஷ்குமார்

அரசு ஊழியர்களுக்கு கொரோனா காலத்திலும் ஊதியத்தில் ஒரு பைசா கூட குறைக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட ராதானூரை சேர்ந்த வாசு என்பவர், அதே ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓடைக்கல் கிராம உதவியாளராக இடமாறுதல் செய்யப்பட்டார். இதனை ரத்து செய்து தன்னை மீண்டும் ராதானூர் கிராம உதவியாளராக நியமிக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வாசு மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், மனுத்தாரரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். பெரும்பான்மையாக வசிக்கும் சாதியினர் தன்னை மிரட்டுவதாக மனுத்தாரர் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி, இந்த காரணத்தை ஏற்றுக்கொண்டால் தமிழகத்தில் எந்த கிராமத்திலும் மாற்று சாதியினர் பணிபுரிய முடியாது எனக் கூறினார். கொரோனா காலத்தில் தினக்கூலி தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் வருவாய் இழப்பை சந்தித்து வாழ்க்கையை நடத்த போராடி வரும் வேளையில், அரசு ஊழியர்களின் ஊதியத்தில் ஒரு பைசா கூட குறைக்கப்படவில்லையென நீதிபதி கூறினார். தான், தனது குடும்பம் மற்றும் உறவினர்களின் நலனை பற்றி மட்டும் சிந்திக்காமல், சமூக நலன் குறித்தும் அரசு ஊழியர்கள் சிந்திக்க வேண்டும் என நீதிபதி சுரேஷ்குமார் கருத்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து, இந்த வழக்கை அவர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Exit mobile version