தனியார் பள்ளிகள் 40% கட்டணம் வசூலிக்கலாம்!

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் 40% கல்வி கட்டணத்தை ஆக.31-க்குள் வசூலிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

கல்விக்கட்டணம் தொடர்பாக இடைக்கால உத்தரவைப் பிறப்பித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை சுட்டிக்காட்டினார். மத்திய-மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், ஒவ்வொரு நாளும் புதிய கோணத்தில் கொரோனா தொடர்கிறது என்று கூறினார். அனைவரும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகளின் கோரிக்கைகள் குறித்து உடனடியாக உத்தரவு பிறப்பிக்க இயலாது என குறிப்பிட்டார். தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் 75 சதவீத கட்டணத்தை வசூலிக்கலாம் என அரசு முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார். தனியார் பள்ளிகள் 40 சதவீத கல்வி கட்டணத்தை ஆகஸ்ட் 31-க்குள் வசூலிக்கலாம் என நீதிபதி தெரிவித்தார். 35 சதவீத கட்டணத்தை அடுத்த இரண்டு மாதங்களுக்கு பின்னர் வசூலிக்கலாம் என்றும் கூறினார். பாடப்புத்தகங்களை இலவசமாகவோ அல்லது குறைவான கட்டணத்தில் வழங்கவோ அரசு முடிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, அரசு உதவி பெறாத அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் எனக் கூறினார்.

Exit mobile version