சேலத்தில் நள்ளிரவில் பாலத்தின் மீதிருந்து ஆம்னி பேருந்து கவிந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.
பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்தில் 28 பேர் பயணம் செய்தனர். சேலம் கொண்டலாம்பட்டி அடுத்த பட்டர்பிளை மேம்பாலத்தில் சென்ற பொழுது, முன்னே சென்ற மற்றொரு பேருந்தை ஆம்னி பேருந்து ஓட்டுநர் முந்த முயன்றார். இதில் நிலை தடுமாறிய ஆம்னி பேருந்து 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து கவிந்தது. இந்த விபத்தில் பேருந்துக்கு அடியில் சிக்கி பொள்ளாச்சியை சேர்ந்த தனசேகரன் என்ற பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 3 பெண்கள் உள்பட 14 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து மாவட்ட ஆட்சியர் ரோகிணி, மாநகர காவல் ஆணையர் சங்கர் ஆகியோர் சம்பவ இடத்தில் நேரில் பார்வையிட்டனர். பேருந்தின் மேல்பக்கத்தில் அதிகளவில் சரக்குகளை ஏற்றி வந்ததாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.