சென்னை கொரட்டூரில் தனியார் நிதி நிறுவன மேலாளரிடம் நூதன முறையில் 3 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பறித்துச் சென்ற இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை காரம்பாக்கத்தில் உள்ள, தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வரும் கௌதம் என்பவரைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட இருவர், கொரட்டூரில் உள்ள அடகுக் கடையில் 20 சவரன் நகைகளை மீட்டு மார்க்கெட் விலைக்கு விற்றுப் பணம் தரும்படி கேட்டுள்ளனர். போலி ரசீதுகளை Whatsapp மூலம் கௌதமிற்கு அனுப்பி வைத்த அவர்கள், நகையை மீட்கத் தேவைப்படும் 3 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து வருமாறு கூறியுள்ளனர். அவர்களை நம்பி, கௌதம் பணத்தை எடுத்துக் கொண்டு, கொரட்டூரில் உள்ள அடகு கடைக்கு வந்தார். அப்போது, அங்கு வந்த 2 இளைஞர்கள், அடகுகடை மூடி இருப்பதால் கடை உரிமையாளரின் வீட்டிற்கேச் சென்று நகையை மீட்டு வருவதாகக் கூறி, பணத்தைப் பெற்றுக் கொண்டு மாயமானார்கள். கொரட்டூர் காவல் நிலையத்தில் கௌதம் அளித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் ஜெகன், விஜயகுமார் ஆகியோரைக் கைது செய்து பணத்தைப் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, புழல் சிறையில் அடைத்தனர்.