தந்தை இறப்பு; தவிக்கும் ஏழை மாணவன் – மாற்றுச்சான்றிதழ் வழங்க 8லட்சம் கேட்ட தனியார் கல்லூரி!

தூத்துக்குடி மாவட்டம் அக்கநாயக்கன்பட்டி கிராமத்தில், ஏழ்மை காரணமாக கல்லூரி படிப்பை தொடர இயலாத மாணவனிடம், தனியார் கல்லூரி ஒன்று 8 லட்சம் ரூபாய் கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அக்கநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகன் சூரியபிரகாஷ், திருச்சி சிறுகனூர் பகுதியில் உள்ள வேளாண்மை கல்லூரியில், 1லட்சத்து 85 ஆயிரம் செலுத்தி, விடுதியில் தங்கி கல்வி பயின்றார். அரசு உதவித்தொகையிலேயே கல்வி பயிலலாம் எனக் கூறிய கல்லூரி நிர்வாகம் இரண்டாம் ஆண்டில், மீண்டும் 1 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணம் கட்ட சூரியபிரகாஷை வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, சூரியபிரகாஷின் தந்தையும் மாரடைப்பால் உயிரிழந்தார். மேற்கொண்டு படிப்பை தொடர முடியாத சூழலில், சூரியபிரகாஷ் கல்லூரி நிர்வாகத்திடம், மாற்றுச் சான்றிதழை கேட்டுள்ளார். ஆனால், 3ஆம் ஆண்டிற்கான 8 லட்சம் ரூபாயை செலுத்தினால் தான் மாற்றுச் சான்றிதழ் வழங்க முடியுமென கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளதாக தெரிகிறது. இது குறித்து சிறுகனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என சூரியபிரகாஷின் தாய் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Exit mobile version