தேர்தல் சமயத்தில், சமூக வலைத்தளங்களில், அரசியல் கட்சிகள் வெளியிடும் விளம்பரங்களை கண்காணிக்க உரிய விதிகளை வகுக்காவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க நேரிடும் என்று, தேர்தல் ஆணையத்திற்கு தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மக்களவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே, பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரங்களை துவங்கிவிட்டன. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் தங்கள் கட்சிக்கு ஆதரவாக தொண்டர்களும், கட்சியின் தொழில்நுட்ப பிரிவினரும் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், தேர்தல் சமயத்தில் சமூக வலைத்தளங்களில், தேர்தல் பிரச்சாரம் தொடர்பான விளம்பரங்கள் தணிக்கை செய்யப்படாமலே வெளியிடப்படுகின்றன. இந்த நிலையில், தேர்தல் சமயத்தில் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் அரசியல் கட்சிகளின் பிரச்சார விளம்பரங்களை கட்டுப்படுத்த, உரிய விதிகளை வகுக்க வேண்டும் என, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கும் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று, அவ்வாறு விதிகளை வகுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாட வேண்டியது வரும் என எச்சரித்துள்ளது.