கொரோனா நோயாளிகளை அழைத்து செல்ல தனியார் ஆன்புலன்ஸ் நிறுவனங்கள் அதிக கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. தினசரி வாடகை 30 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிப்பது நோயாளிகளின் உறவினர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் கோரப் பிடியில் சிக்கி நோயாளிகளும், உறவினர்களுக்கும் பெரும் அச்சத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியுள்ளதால் ஆம்புலன்ஸ்சில் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதனை தங்களுக்கு சாதகமாக
பயன்படுத்திக் கொண்ட சில ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், வழக்கமாக வசூலிக்கும் கட்டணத்தை விட பன்மடங்கு உயர்த்தி கட்டணம் வசூல் செய்வதாக நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளியின் உறவினரிடம், தனியார் ஆம்புலன்ஸ் ஊழியர் பேரம் பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் ஆம்புலன்ஸ் கட்டணமாக ஐந்தாயிரம் ரூபாயும், ஒரு மணி நேரம் ஆக்சிஜன் பயன்பாட்டுக்கு தனியாக 2 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், ஆக மொத்தம் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகலாம் என்றும் பட்டியலிடுகிறார் அந்த தனியார் ஆம்புலன்ஸ் ஊழியர். இந்த ஆடியோ உதவி தேவைப்படும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா நோயாளிகளை ஏற்றி செல்லும் தனியார் ஆம்புலன்ஸ்களுக்கான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணையித்தது. ஆனால் அரசு அறிவித்த கட்டணத்தை விட பன்மடங்கு அதிகமாக வசூல் வேட்டையில் ஈடுபடும் தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் அரசுக்கு வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.