தமிழக சிறைகளில் கைதிகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, 7 ஆண்டுகள் மற்றும் அதற்கு கீழ் தண்டனை விதிக்கக்கூடிய வழக்குகளில் கைதாகி சிறைகளில் உள்ளவர்களுக்கு ஜாமீன் மற்றும் பரோல் வழங்க உயர்மட்டக்குழுவை அமைத்து முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழக சிறைகளில் இருந்த ஆயிரக்கணக்கான விசாரணை கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பரோல் வேண்டி பல கைதிகள், வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம், கல்யாணசுந்தரம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக சிறைகளில் கைதிகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக உள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தமிழக சிறைகளில் புதிதாக 58 செல்போன்கள் வாங்கப்பட்டு, வீடியோகால் மூலமாக 15 ஆயிரம் கைதிகள், தங்கள் குடும்பத்தினருடன் பேசியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தமிழக சிறைத்துறையின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.