12ம் வகுப்பு மாணவிக்கு இளவரசி டயானா விருது!

ஒசூர் பள்ளி மாணவி ஒருவருக்கு, பிரிட்டிஷ் இளவரசி டயானா பிறந்தநாளை முன்னிட்டு, இங்கிலாந்து அரசாங்கம், டயானா விருது வழங்கிப் பெருமைப்படுத்தி உள்ளது. பிரிட்டிஷ் அரசாங்கம் விருது வழங்கக் காரணம் என்ன? அந்த விருதைப் பெற ஒசூர் பள்ளி மாணவி என்ன செய்தார். மனவளர்ச்சி குன்றிய பெண்கள், கிராமப்புற ஏழை-எளிய பெண்கள். அவர்களின் வாழ்வில் முன்னேற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக தன்னை அர்ப்பணித்து கொண்டு செயல்படுகிறார் 12-ஆம் வகுப்புப் படிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த நிகாரிகா என்ற மாணவி. ஒசூர், தில்லை நகரை சேர்ந்த கோபிநாத்-சிரிசா தம்பதியினரின் மூத்த மகள்தான் நிகாரிகா. பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்புப் படிக்கும் நிகாரிகா, சிறுவயது முதலே படிப்பு, பரதம், ஓவியம் என அனைத்திலும் சிறந்து விளங்கினார். அவரது பரதநாட்டிய அரங்கேற்றம், ஓவியப் படைப்புகள் விற்பனை மூலம் கிடைத்த வருவாய் அனைத்தையும் ஏழை, எளியவர்களுக்கு உதவுவதில் செலவிட்டார்.

மேலும், ஏழை-எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், கடந்த ஓராண்டாக ‘ஹோப் வேர்ல்டு’ என்ற செயல் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார். அதன்மூலம், ஒசூர் அபாலா மனவளர்ச்சி குன்றிய காப்பகத்தில் உள்ள 48 பெண்களுக்கு பெயிண்டிங், துணிப்பைகள் தைத்தல், அழகு பொருட்கள் செய்தல் உள்ளிட்ட கைத்தொழில்களை மாணவி நிகாரிகா கற்றுக்கொடுத்து வருகிறார். அதேபோல, ஒசூர் அருகேயுள்ள தொட்டமஞ்சு மலைக்கிராமத்தில் வாழும் ஏழை-எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில், அவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்து சுய தொழில்களைக் கற்றுக் கொடுத்து வருகிறார்.

மாணவி நிகாரிகா, அவரது இந்தச் செயல் திட்டம் குறித்து, கடந்தாண்டு டிசம்பர் 4-ஆம் தேதி, ஐ.நா சபையில் விளக்கிப் பேசினார். அதையடுத்து மாணவிக்கு இளவரசி டயானா விருது வழங்க வேண்டும் என அவரது பள்ளி நிர்வாகம் சார்பில் பிரிட்டிஷ் அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஜூலை 1-ஆம் தேதி மறைந்த பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில் பிரிட்டிஷ் அரசாங்கம், மாணவி நிகாரிகாவிற்கு டயானா விருதை வழங்கிக் கௌரவித்தது. அதையடுத்து மாணவி நிகாரிகாவின் பள்ளி நிர்வாகம், அவரது பெற்றோர்கள் உள்ளிட்ட அந்தப் பகுதி மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தனது சேவைகளின் மூலம், பிரிட்டிஷ் அரசின் விருதைப் பெற்றது, அவருக்கும், அவரது பெற்றோர்களுக்கு மட்டுமல்ல… ஒட்டுமொத்த தமிழகத்திற்கே பெருமை என்பதும் உண்மையே.

Exit mobile version