மொனாக்கோவில் இருந்து இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அந்நாட்டின் இளவரசர் ஆல்பர்ட் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பிரான்சில் உள்ள நகர நாடான மொனாக்கோவிலிருந்து இந்தியாவுடன் இருநாட்டு உறவை பலப்படுத்தும் விதமாக முதன் முறையாக இரண்டு நாள் பயணமாக அதன் இளவரசர் ஆல்பர்ட் நேற்று டெல்லிக்கு வந்தார். இந்தப் பயணத்தின் இரண்டாவது நாளான இன்று பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசினார்.
இதைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் சுஷ்மா சுவராஜையும் அவர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஸ்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மொனாக்காவிலிருந்து வந்த தொழில்துறையினருடன் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தின்போது, இருதரப்பிலும் பல ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இன்றுடன் அவரது அலுவலக பயணம் நிறைவுற்றுள்ளது. இந்நிலையில், வரும் 10ம் தேதிவரை தனிப்பட்ட முறையில் அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதையடுத்து அவர் மொனாக்கோவிற்கு திரும்புகிறார்.