பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை விலை மதிக்க முடியாத ஒன்றாக கருதுவதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்மையில் தான் இந்தியாவிற்கு சென்ற போது பிரதமர் மோடிய சந்தித்ததாகவும், அப்போது, என்ன உதவி வேண்டும் என்று அவர் கேட்டபோது, 15 நிமிடம் இலங்கைக்கு வந்து செல்லும்படி அழைப்பு விடுத்ததாகவும் கூறினார். தனது அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இலங்கைக்கு வருகை புரிந்ததால் தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற இலங்கையில், தற்போது பாதுகாப்பு நிலவி வருவதாக அவர் தெரிவித்தார். அமெரிக்கா கொண்டு வந்துள்ள ‘சோபா’ ஒப்பந்தத்தை முழுமையாக எதிர்ப்பதாக தெரிவித்த அதிபர் சிறிசேன, அமெரிக்க படைகள் நாட்டுக்குள் வரும் வகையில் எந்தவொரு ஒப்பந்தத்தையும் தான் ஆதரிக்க போவதில்லை எனவும் அவர் கூறினார்.