மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரை!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வராததால், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றிய அவர், 21 ஆண்டுகளுக்கு முன் நமது ராணுவம் இதே நாளில் கார்கில் போரில் வெற்றி பெற்றது என்றும், அதன்பின் இந்தியா- பாகிஸ்தான் நல்லுறவை ஏற்படுத்த முயன்றதாகவும், ஆனால் அது நிறைவேறவில்லை என்றும் குறிப்பிட்டார். உள்நாட்டு பிரச்னையை திசை திருப்புவதற்காக இந்திய எல்லையை அபகரிக்க பாகிஸ்தான் சதி திட்டத்தில் ஈடுபட்டதாகவும் பிரதமர் விமர்சித்தார். பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் குறைவு என்றும், உயிரிழப்பு விகிதமும் குறைவு எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார். நோய் தொற்றில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வரராததால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தை சேர்ந்த நகர்மன்ற தலைவர் முகமது இக்பாலை பாராட்டிய பிரதமர், அவர் தமது சொந்த செலவில் கிருமி நாசினி தெளிப்பு வாகனத்தை மக்களுக்கு அர்ப்பணித்ததை சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, சிபிஎஸ்இ தேர்வில் 490 மதிப்பெண் பெற்ற தமிழ்நாட்டின் நாமக்கல்லை சேர்ந்த மாணவி கனிகாவிடம் தொலைபேசியில் உரையாடியாடியதை குறிப்பிட்ட பிரதமர் மோடி, நாமக்கல் என்றால் ஆஞ்சநேயர் நினைவுக்கு வரும் என்றும், இனி மாணவி கனிகாவின் நினைவு வரும் எனவும் பாராட்டினார்.

Exit mobile version