சட்ட விதிகளின் படியே வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நாடு முழுவதும் அரசியல் பின்னணியில் உள்ளவர்களுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில், வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சியினரை குறிவைத்து, அவர்களை மிரட்டுவதற்காகவே சோதனைகள் நடத்தப்படுவதாக, எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் நேரடியாகவே குற்றம்சாட்டியுள்ளனர். இதனிடையே, தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த மோடி, சில அரசியல் தலைவர்களுக்கு எதிராக நடைபெறும் வருமான வரித்துறை சோதனை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என்றும், சோதனைகள் அனைத்தும் சட்டவிதிகளின் படியே நடைபெறுவதாகவும் கூறியுள்ளார்.