75-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டப்பட்டு வருகிறது.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.
நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் மோடி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, செங்கோட்டைக்கு சென்ற பிரதமரை, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். முப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.
காலை சரியாக 7.30 மணிக்கு பிரதமர் மோடி தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். வரலாற்றில் முதன்முறையாக இந்தாண்டு இந்திய விமானப் படையின் இரண்டு ஹெலிகாப்டர்கள் பூமழைத் தூவின.
இந்த விழாவில் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்பட 32 வீரர்களும், இந்திய விளையாட்டு ஆணையத்தை சேர்ந்த இரண்டு அதிகாரிகளும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மத்திய அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், எம்.பி.க்கள், முப்படைத் தளபதிகள் உள்பட பலரும் பாதுகாப்பான இடைவெளியை விட்டு அமர்ந்திருந்தனர்.
விழாவில் கலந்து கொண்ட அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர்.