கடலில் உள்ள நீர், ஆற்றல், உணவு, கனிமங்கள் ஆகிய வளங்களைக் கண்டறிந்து பயன்படுத்துவதன் தேவையைப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரில் 107ஆவது இந்திய அறிவியல் மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதன்பின் மாநாட்டில் உரையாற்றிய மோடி, புத்தாண்டிலும் புதிய பத்தாண்டிலும் முதலாவதாக அறிவியல் நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். அறிவியல், புத்தாக்கம் ஆகியவற்றுடன் தொடர்புள்ள பெங்களூரில் மாநாடு நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார். வளர்ச்சியை நோக்கிய நமது கனவுகளை நனவாக்கும் வகையில் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி முன்னேறிச் செல்ல வேண்டும் எனத் தெரிவித்தார். புத்தாக்கங்கள் புனைவதில் இந்தியா 52ஆவது இடத்தில் உள்ளதாகவும், முந்தைய ஐம்பதாண்டுகளில் இல்லாத வகையில், கடந்த 5ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் மூலம் ஏராளமான தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். இத்தகைய சாதனைகளைப் படைத்த அறிவியலாளர்களுக்குப் பாராட்டுக்களையும் தெரிவித்தார். விண்வெளித் துறையில் வெற்றிகண்ட நாம் ஆழ்கடலில் உள்ள வளங்களைக் கண்டறிவதில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவியலாளர்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.