நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு நவம்பர் மாதம் வரை இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
ஊரடங்கு தொடர்பாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், முதற்கட்ட தளர்வுக்கு பிறகு மக்கள் யாரும் விதிகளை முறையாக பின்பற்றவில்லை என்றும், மக்களின் பொறுப்பற்ற தன்மை கடுமையான விளைவுகளை ஏற்படுத்திவிடும் எனவும் எச்சரித்தார். தற்போது செய்யக்கூடிய சிறிய தவறுகளுக்காக மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும் என தெரிவித்த அவர், அரசின் விதிகளை மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றார். சரியான நேரத்தில் நடவடிக்கையை எடுத்தால்தான் நெருக்கடியை எதிர்கொள்ள முடியும் என தெரிவித்த பிரதமர் மோடி, கட்டுப்பாடுகள் மூலம் பல லட்ச ரூபாயை நாம் மிச்சப்படுத்தியுள்ளோம் என கூறினார். பிரதமர் முதல் சாமானியர் வரை நம் நாட்டில் அனைவரும் ஒன்றுதான் என குறிப்பிட்ட அவர், தற்போதைய சூழலை சாதாரணமாக கருதிவிடக் கூடாது என தெரிவித்தார். பருவமழை காலத்தில் கொரோனா குறித்து நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிக கவனமுடன் இருப்பது அவசியம் என்றார். பிற நாடுகளை ஒப்பிடும் போது நாம் கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், நாட்டில் ஏழை மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது என தெரிவித்தார். கடந்த 3 மாதங்களில் 20 கோடி ஏழை மக்களின் வங்கிக் கணக்கில் 31 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாகவும், 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 18 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு 90 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், நவம்பர் மாதம் வரை இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஏழை புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பயன் அளித்து வருவதாகவும் தெரிவித்தார். ஏழைகளுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்க இரண்டு தரப்பினர் முக்கியமானவர்கள் என்றும், அவர்கள் விவசாயிகள் மற்றும் நேர்மையாக வரி செலுத்துவோர் ஆவர் என தெரிவித்த பிரதமர், அவர்களுக்கு இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.