உலகில் அமைதி நிலவவும், வளம் செழிக்கவும் குவாட் கூட்டமைப்பில் இந்தியா அபரிமிதமான பங்களிப்பை செலுத்தும் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அடங்கிய குவாட் நாடுகளின் உச்சி மாநாடு வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் 2004ம் ஆண்டு தாக்கிய சுனாமி பாதிப்புக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்ட பின்னர், கொரோனா தொற்றுக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் இந்த தருணத்தில் மனிதகுல நலனுக்காக தற்போது மீண்டும் கூடியிருப்பதாகத் தெரிவித்தார். குவாட் தடுப்பூசி முயற்சி, இந்தோ-பசிபிக் நாடுகளுக்கு பெரிதும் பயனளிக்கும் எனக் கூறினார். உலகில் அமைதி நிலவவும், வளம் செழிக்கவும், குவாட் கூட்டமைப்பில், இந்தியாவின் பங்களிப்பு அளப்பரியதாக இருக்கும் என தாம் நம்புவதாக மோடி குறிப்பிட்டார். குவாட் அமைப்பு உலக நன்மைக்கான சக்தியாக விளங்கும் எனவும் தெரிவித்தார்.