புதிய கல்விக் கொள்கை குறித்து பிரதமர் மோடி விளக்கம்!!

புதுமை, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தர வேண்டுமென்பதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

புதிய கல்விக் கொள்கை குறித்து மாணவர்கள் மத்தியில் காணொலி மூலம் உரையாற்றிய மோடி, மாணவர் சமூகத்தின் எதிர்பார்ப்புகளை புதிய கல்விக் கொள்கை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்தார். புதிய கல்விக் கொள்கையின் மூலம் பல துறைகளில் மாணவர்கள் அறிவை வளர்த்துக் கொள்ள முக்கியத்துவம் அளிக்கப்படும் எனக் கூறினார். புதிய கல்விக் கொள்கையானது ஒட்டுமொத்த இந்தியாவுக்கான திட்டம் என்று கூறிய பிரதமர் மோடி, இதன் மூலம் 21ஆம் நூற்றாண்டின் புதுமைக்கு ஏற்ப கல்வியை பயன்படுத்த முடியும் எனக் குறிப்பிட்டார். புதிய கல்விக் கொள்கையில் மாணவர்கள் விருப்பப்பட்ட பாடங்களை தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், கல்வி முறையில் இதுவரை இருந்த சிக்கல்கள் தீர்க்கப்படும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார். தாய்மொழி மூலம் தான் முழுமையான அறிவு வெளிப்படும் என்றும், உலகின் வளர்ந்த நாடுகள் தாய்மொழிக் கல்வி மூலம் தான் ஏற்றம் கண்டுள்ளன என்றும் தெரிவித்தார். கற்பது, கேள்வி கேட்பது, தீர்வை காண்பது இம்மூன்றையும் மாணவர்கள் கைவிடக்கூடாது என்றுக் கூறிய பிரதமர் மோடி, மனப்பாட முறையிலிருந்து செயல்வழிக் கல்வி முறையை நோக்கி மாணவர்கள் நகர வேண்டும் எனத் தெரிவித்தார். வேலை தேடுவதற்கு பதிலாக, வேலையை உருவாக்குவதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் எனக் கூறினார். இந்தியா வளம் பெற தாய் மொழியுடன் பிற மொழிகளையும் கற்க வேண்டும் எனத் தெரிவித்த மோடி, தேசிய மொழியை கற்பது குறைவாக உள்ளதாக குறிப்பிட்டார். பல நூறு மொழிகளின் களஞ்சியம் கொண்ட இந்திய திருநாட்டில், அவற்றை கற்க நம் வாழ்நாள் போதாது எனக் கூறினார். புதிய கல்விக் கொள்கை புதுமையாகவும், நவீன மயமாகவும் உள்ளது எனக் குறிப்பிட்ட மோடி, இன்றைய இளைஞர்களின் மீது அபார நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.

 

Exit mobile version