மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி ஒரே நாளில் மூன்று மாநிலங்களில் தனது தேர்தல் பரப்புரையை மேற்கொள்கிறார். மக்களவை தேர்தல் வரும் 11ம் தேதி முதல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக தங்களது தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளனர்.
பாஜக சார்பில் பிரதமர் மோடி, அக்கட்சித் தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நாளை மறுநாள் மூன்று மாநிலங்களில் பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளார். உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் அவர் வாக்கு சேகரிக்கிறார்.
மேற்கு உத்தர பிரதேச மக்களை கவரும் வகையில் மீரட்டில் அவர் தேர்தல் பிரசாரம் செய்கிறார். முதல் கட்டமாக ஏப்ரல் 11ம் தேதி இங்கு 8 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த முறை மக்களவை தேர்தலில் அந்த தொகுதிகளில் பாஜக வென்றது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து உத்தரகாண்டின் ருத்ராபூரிலும், பின்னர் காஷ்மீரின் அக்னூரிலும் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்களில் பங்கேற்று அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். வெள்ளிக்கிழமை ஒடிசா, தெலங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பிரதமர் மோடி அடுத்தடுத்து பிரசாரம் செய்கிறார்.