மத்திய அரசின் முத்ரா யோஜனா திட்டம் குறித்த விழிப்புணர்வு இளைஞர்களிடம் இல்லாத நிலையில், இந்த திட்டத்தின்கீழ் கடனுதவி பெற்று சிறந்த தொழில் முனைவோராக விளங்கி பிரதமரின் பாராட்டையும் பெற்றுள்ள மதுரை இளைஞர் அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளார். இதுகுறித்த செய்தித்தொகுப்பு இது…
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் படித்து முடித்தவுடன் வேலை வேண்டும் அதிலும் கைநிறைய சம்பளம் வேண்டும் என்ற கனவோடு உள்ளனர். சொந்தமாக தொழில் துவங்கும் தைரியம் பல இளைஞர்களிடம் காணப்படுவதில்லை. ஆனால், தனது பட்டப்படிப்பை முடித்தவுடன் சொந்தமாக தொழில்துவங்கி, 20 பேருக்கு வேலை கொடுக்கும் அளவிற்கு உயர்ந்துள்ள மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த ஷண்முகப்பிரியன் என்ற முதுகலை மாணவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமங்களில் இணையதள சேவையை கொண்டு செல்வதன் மூலம் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
சிறுவயது முதலே சிறந்த தொழில் முனைவோராக வேண்டும் என்ற ஷண்முகபிரியனின் கனவிற்கு சிறுவயதில் இவர் உருவாக்கிய சோலார் ஸ்கூட்டர் வித்திட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களும் இவரது கனவிற்கு பாலமாக இருந்துள்ளனர்.
பட்டப்படிப்பை முடித்தவுடன், மனதிற்கு பிடித்தாற்போல வேலை அமையாத நிலையில், தானே வேலையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட ஆரம்பித்துள்ளார் ஷண்முகப்பிரியன். இதற்கென முத்ரா திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து கடனுதவியும் பெற்றுள்ளார்.
இதையடுத்து பின்தங்கிய கிராமப்பகுதிகளில் இணையத்தை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்ட ஷண்முகப்பிரியன், தொடர்ந்து தன்னுடைய தொழிலை வளர்ச்சியடைய செய்து, தற்போது 20 பேருக்கு வேலை வழங்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.
இதனிடையே 2018 ஏப்ரல் 11ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற முத்ரா திட்டப் பயனாளிகள் கூட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பும் ஷண்முகப்பிரியனுக்கு கிடைத்துள்ளது. 90 நபர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் தென்னிந்தியாவில் இருந்து பங்கேற்ற ஒரே தமிழர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.
கூட்டத்தில் பின் இருக்கையில் இருந்து முன் இருக்கைக்கு வந்து பேசுமாறு பிரதமர் மோடியே தன்னைப் பார்த்து கூறியதை பெருமையுடன் நினைவு கூர்கிறார் ஷண்முகப்பிரியன். தொடர்ந்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஷண்முகபிரியனை பாராட்டிய பிரதமர் மோடி, அவர் குறிப்பிட்ட “i want to be a job Creator not to be a Job Seeker” என்ற வாக்கியத்தையும் மேற்கோள் காட்டியுள்ளார்.
தனியாக “அண்ணே என்னது இது” என்ற தலைப்பில் தனியாக ஒரு யூடியூப் சேனலையும் ஷண்முகப்பிரியன் நடத்தி வருகிறார். இந்த யூடியூப் சேனலுக்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளதாக பெருமிதத்துடன் கூறும் இவர், விரைவில் சாட்டிலைட் சானல் ஒன்றை துவங்கவும் முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். கிராமப்புற இளைஞர்களிடம் மத்திய அரசின் திட்டங்களை பயன்படுத்துவதற்கான விதையை ஊன்ற வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் கூறுகிறார் ஷண்முகப்பிரியன்.