ஐநாவின் பொதுக்கூட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
முதல்கட்டமாக ஹூஸ்டன் நகருக்கு செல்லும் பிரதமர் அங்கு பல்வேறு நாடுகளின் தொழில் அதிபர்களுடனான சந்திப்பில் பங்கேற்கிறார். அவர்களை இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கிறார். இதைத் தொடர்ந்து 22 ஆம் தேதி இந்தியா வம்சாவளியினரால் நடத்தப்படும் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் இணைந்து பங்கேற்கிறார்.
50 ஆயிரம் இந்திய அமெரிக்கர்கள் பங்கேற்கவுள்ள இந்த நிகழ்ச்சிக்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 24 ஆம் தேதி மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘தலைமையின் முக்கியத்துவம்’ என்ற சிறப்பு கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றுகிறார். பின்னர் 27 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளின் தலைவர்களோடு உரையாடும் பிரதமர் அன்றிரவே நாடு திரும்புகிறார்
இந்நிலையில், அமெரிக்க சுற்றுப்பயணம், பல நாடுகளுடன் தலைவர்களுடன் உரையாடுவதற்கான நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. ஐநாவில் இந்தியா சார்பில் கொண்டாடப்படவுள்ள காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா அவரது எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமாக அமையும் என்றும் பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஹூஸ்டனில் நடைபெறும் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ள பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வரவேற்கும் விதமாக அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் இந்திய அமெரிக்க கொடிகளை ஏந்தியவாறு 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் பங்கேற்றன.