குவாட் மாநாட்டில் கலந்து கொள்ளுதல் உள்ளிட்டவற்றுக்காக, பிரதமர் மோடி இன்று அமெரிக்கா புறப்படுகிறார்.
இன்று காலை இந்தியாவில் இருந்து புறப்படும் பிரதமர் நரேந்திர மோடி, நாளை ஜப்பானிய பிரதமர் யோஷி ஹிடே சுகா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். இதை தொடர்ந்து அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடுகிறார். ஆப்பிள் சி.இ.ஒ. டிம் குக் உடனும் அவர் பேசவுள்ளார். அன்றைய தினம் அதிபர் ஜோ பைடன் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, அதன்பின்னர் துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து பேசுகிறார். செப்டம்பர் 24ம் தேதி, அதிபர் ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் பிரதமர் மோடி, வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு குறித்து பேசவுள்ளார். இதையடுத்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்க நாட்டுத் தலைவர்களையும் சந்தித்துப் பேசும் பிரதமர் மோடி, நான்கு நாடுகள் பங்கேற்கும் ‘குவாட்’ மாநாட்டில் கலந்துகொள்கிறார். அடுத்த நாள் வாஷிங்டனில் இருந்து நியூயார்க் புறப்படும் மோடி, ஐக்கிய நாடுகள் சபையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். பின்னர், இம்மாதம் 27ம் தேதி பிரதமர் இந்தியா திரும்பவுள்ளார்.