சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் மாமல்லபுரம் வருகை இந்திய – சீன உறவில் புதிய சகாப்தத்தின் தொடக்கம் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை சென்னைக்கு வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கைத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோர் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து கிண்டி வரை வழிநெடுக மேளதாளம் முழங்கக் கலைநிகழ்ச்சிகளுடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கிண்டி விடுதியில் ஓய்வெடுத்த ஷி ஜின்பிங் மாலையில் மாமல்லபுரத்துக்குச் சென்றார். தமிழர்களின் பாரம்பரிய வேட்டி சட்டை அணிந்திருந்த மோடி சீன அதிபரை வரவேற்றார். அதன்பின் இருவரும் பல்லவர் காலக் குடைவரைக் கோவில்கள், சிற்பங்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டனர். பின்னர் கடற்கரைக் கோவிலுக்குச் சென்ற தலைவர்கள், பரதநாட்டியம், கதக்களி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தனர். கோவளம் விடுதியில் தங்கியிருந்த பிரதமர் காலையில் கடற்கரைக்குச் சென்றபோது மணலில் கிடந்த பெட் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றைச் சேகரித்து விடுதி ஊழியரிடம் ஒப்படைத்தார். பொது இடங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்குச் சான்றாக மோடியின் செயல் அமைந்திருந்தது.
முதல்நாள் இரவில் கிண்டி விடுதியில் தங்கிய சீன அதிபர் காலையில் மீண்டும் கோவளத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியெங்கும் மேளதாளங்கள், கலைநிகழ்ச்சிகளுடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்களும் மாணவ மாணவிகளும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்கும் பதாகைகளைக் கைகளில் ஏந்தி அவரை வரவேற்றனர்.
கோவளத்துக்குக் காரில் சென்று இறங்கிய ஷி ஜின்பிங்கை விடுதி வாயிலில் நின்ற பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று அழைத்துச் சென்றார். அதன்பின் இருவரும் பேட்டரி காரில் விடுதியில் உள்ள பூங்காவின் இயற்கை எழிலைப் பார்வையிட்டபடி, கடற்கரையோரம் உள்ள மண்டபத்துக்குச் சென்றனர். குண்டு துளைக்காத கண்ணாடி அறையில் வங்கக் கடலின் இயற்கை எழிலைப் பார்வையிட்டபடி பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகிய இருவரும் பேச்சு நடத்தினர். சுமார் 50 நிமிடப் பேச்சுக்குப் பின் அரங்கை விட்டு வெளியே வந்த இருவரும் திறந்த வெளியில் கடற்கரையின் எழிலைக் கண்டுகளித்தபடி சற்று நேரம் உரையாடினர்.
தாஜ் விடுதியில் நடைபெற்ற பேச்சில் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். சீனா சார்பில் அதிபர் ஷி ஜின்பிங், வெளியுறவு அமைச்சர் வாங் இ மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது மதிப்புக்குரிய விருந்தினரை வரவேற்கிறேன் எனப் பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வரவேற்றார்.
சீனாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே ஆழமான பண்பாட்டு, வணிகத் தொடர்புகள் நிலவி வருவதைப் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்தியாவும் சீனாவும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பொருளாதார சக்திகளாக விளங்குவதாகக் குறிப்பிட்டார். மாமல்லபுரச் சந்திப்பு இருநாட்டு உறவுகளில் புதிய சகாப்தத்தின் தொடக்கம் எனவும் மோடி தெரிவித்தார். கூட்டத்தில் பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங், தமிழகத்தின் விருந்தோம்பல் தங்களை வியப்பில் ஆழ்த்தி விட்டதாகவும், இது எப்போதும் நினைவில் நிற்கும் ஓர் அனுபவமாகத் தனக்கும் தன்னுடன் வந்தவர்களுக்கும் அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தாஜ் விடுதியில் இரு நாட்டுத் தலைவர்களும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டுத் தமிழர்களின் கலைநுணுக்கங்களைக் கண்டு வியந்தனர். தறியில் பட்டுத்துணி நெசவு செய்யும் முறையையும் அறிந்ததுடன், பட்டுத் துணிகள் கண்காட்சியையும் பார்வையிட்டனர். அப்போது சீன அதிபரின் உருவப்படம் பொறித்த பட்டுத் துணியைப் பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கினார். பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படம் பொறித்த ஒரு தட்டைச் சீன அதிபர் பரிசாக அளித்தார்.
தாஜ் விடுதியில் இருந்து புறப்பட்ட சீன அதிபர் ஷி ஜின்பிங்கைப் பிரதமர் நரேந்திர மோடி வழியனுப்பி வைத்தார். அங்கிருந்து சாலைவழியே காரில் சென்னை விமான நிலையத்துக்கு வந்த சீன அதிபரைத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். தனி விமானத்தில் ஷி ஜின்பிங் நேபாளத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.
மாமல்லபுரம் உச்சி மாநாட்டுக்கு வந்த சீன அதிபருக்குப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் விடுத்துள்ள செய்தியில், மாமல்லபுரம் சந்திப்பு இந்தியா-சீன உறவுகளுக்கு மேலும் உந்து சக்தியை அளிக்கும் என்றும், இது இரு நாட்டு மக்களுக்கும் உலகத்திற்கும் பயன் அளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.