சென்னை பெரும்பாக்கத்தில் 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்திற்கு, முதலமைச்சர் முன்னிலையில், பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், சர்வதேச தரத்திலான வீட்டு வசதி கட்டுமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சென்னையில் மாதிரி வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பெரும்பாக்கத்தில் 116 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஆயிரத்து 152 அடுக்கு மாடிக்குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இதற்கான கட்டுமான பணிகளுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், டெல்லியில் இருந்து காணொலி மூலமாக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற காணொலி நிகழ்ச்சியில், முதலமைச்சருடன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆயிரத்து 152 அடுக்குமாடிக் குடியிருப்புகளும், 12 மாதத்தில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடியிருப்பும் 413 சதுர அடி பரப்பளவில் கட்டப்படுகிறது. இந்த வீடுகள், சென்னையில் ஆற்றங்கரையோரம் மற்றும் ஆட்சேபகரமான பகுதிகளில் வாழும் ஏழை மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.
இதேபோல், ஆந்திரா, குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், திரிபுரா ஆகிய மாநிலங்களிலும், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.