நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்: பிரதமர் மோடி

நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, அடுத்த 21 நாட்களுக்கு யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

மக்கள் கட்டுப்பாடு இல்லாமல் நடந்து கொண்டால் நாட்டுக்கு ஏற்படும் பேரழிவை தடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனையும் காப்பாற்ற இதை தவிர வேறு வழியில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த 21 நாட்களை சமாளித்து விட்டால், பல குடும்பங்களை பேரழிவில் இருந்து காப்பாற்ற முடியும் எனக் கூறியுள்ள பிரதமர்,  மருத்துவர்களை தவிர வேறு யாரும் வெளியே வர அனுமதி இல்லை என தெரிவித்தார்.

வீட்டை விட்டு  வெளியே வந்து தெருவில் நிற்க மாட்டேன் என்பதை ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும் என்றும், பொருளாதார பாதிப்பை விட, விலை மதிக்க முடியாத நாட்டு மக்களின் உயிரே முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார். முதல் 67 நாட்களில் ஒரு லட்சம் பேரும், அடுத்த 11 நாளில் மேலும் ஒரு லட்சம் பேரும் கொரேனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், 3 நாட்களில் மேலும் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படும் அளவில் அசுர வேகத்தில் கொரோனா பரவி வருவதாக பிரதமர் கூறினார்.

கொரோனாவை தடுக்க நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலமும், மாவட்டமும் எல்லைகளை முற்றிலும் மூட வேண்டும் என்றும், உறவினர்கள் உட்பட வெளியாட்கள் யாரையும் வீட்டில் சேர்க்க வேண்டாம் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். மக்களுக்கான அத்தியாவசிய தேவைகள் பாதிக்காத வகையில், அரசு நடவடிக்கை எடுக்கும்  எனக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இரவு பகல் பாராமல் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்களுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

மேலும், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகாக 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Exit mobile version