நாடு முழுவதிலும் உள்ள 25 லட்சம் காவலாளிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். சவுக்கிதார் என்று பொருள்படும் நானும் காவலாளிதான் என்ற பிரச்சாரத்தை பாஜக கையிலெடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் சவுக்கிதார் நரேந்திர மோடி என பெயரை மாற்றம் செய்தார். இதனையடுத்து மற்ற பாஜக தலைவர்களும் தங்களது பெயருடன் சவுக்கிதாரை இணைத்துக் கொண்டனர். இந்த நிலையில் நாடு முழுவதிலும் காவல் காக்கும் பணியில் உள்ள கூர்க்கா, வாட்ச்மேன், ஏடிஎம் காவலாளி உள்ளிட்ட 25 லட்சம் காவலாளிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி அவர்களுடன் கலந்துரையாடிய மோடி, பாதுகாவலர் என்பதற்கு பல மொழிகளில் வேறு வேறு அர்த்தங்கள் இருப்பதாக குறிப்பிட்டார். சேவகர்களாக மாற அனைத்து இந்தியர்களும் விரும்புவதாக தெரிவித்த பிரதமர், இதை சிலர் தவறாக விமர்சிக்க முயல்வதாக சாடினார். வரும் 31 ம் தேதி நானும் காவலாளி தான் என பொதுமக்களிடம் அவர் பேசவுள்ளார்.