இந்திய விஞ்ஞானிகள்தான் உலகிலேயே மிகச் சிறந்தவர்கள் என்பதை சந்திரயான் – 2 நிரூபித்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான இன்று ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியின் மூலம் வானொலியில் பிரதமர் மோடி உரையாற்றினார். 25 நிமிடங்கள் உரை நிகழ்த்திய பிரதமர், நீர் கொள்கையை வகுத்த முதல் மாநிலமாக மேகாலயா மாறியுள்ளதை சுட்டிக்காட்டினார். மேகாலயா அரசுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர், ஹரியானாவில் மிகக் குறைந்த நீர் தேவைப்படும் பயிர்களை பயிரிட ஊக்குவிப்பதாகவும், இதனால் நஷ்டத்தில் இருந்து விவசாயிகள் காப்பாற்றப்படுவதாக கூறினார். திருவிழாக்களில் நீர் சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மை குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்திய விஞ்ஞானிகள்தான் உலகிலேயே மிகச் சிறந்தவர்கள் என்பதை சந்திரயான் – 2 நிரூபித்துள்ளதாக பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். கடந்த 4 ஆண்டுகளை காட்டிலும், இந்தாண்டு அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை 4 மடங்கு உயர்ந்துள்ளதாக அப்போது பிரதமர் கூறினார்.