பெட்ரோல் விலையை கட்டுப்படுத்த எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை !

பெட்ரோலிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவது குறித்து, எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. பெட்ரோலிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யக் கூடாது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. சவுதி அரேபியாவின் எரிசக்தி துறை அமைச்சர் அல் பாலிஹ், ஆஸ்திரேலியாவின் பி.பி. எண்ணெய் நிறுவன தலைமை அதிகாரி பாப் டுத்லே, டோட்டல் நிறுவன தலைவர் பாட்ரிக் பவ்யானே, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, வேதாந்தா நிறுவன தலைவர் அனில் அகர்வால் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை கட்டுப்படுத்துவது, இவற்றின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது, எண்ணெய் துறையில் முதலீடுகளை ஈர்ப்பது, ஆழ்கடலில் எண்ணெய் வள ஆய்வு உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வால், நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுவதை தடுப்பதற்கான திட்டங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி விவாதிக்கிறார்.

Exit mobile version