இந்தியாவுக்கு மும்முனை ஆபத்து -முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

கலவரம், பொருளாதார மந்தநிலை, கொரோனா வைரஸ் என இந்தியாவுக்கு மும்முனை ஆபத்து ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார்.

அண்மையில் அவர் எழுதிய கட்டுரை ஒன்றில், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சமூக பதற்றம், மோசமான பொருளாதார நிர்வாகம், தொற்று நோய் ஆகிய மும்முனை ஆபத்துக்களை இந்தியா சந்தித்து வருவதாகவும், சமூக விரோதிகள் மத வன்முறையை தூண்டிவிடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, தற்போது பெரும் சீரழிவை சந்தித்திருப்பதாக தெரிவித்துள்ளார். பொருளாதாரம் பின்னடைவை சந்திக்கும் போது, மத மோதல்கள் அதை மேலும் பாதிக்கும் என குறிப்பிட்டுள்ள மன்மோகன் சிங், இதனால் தொழிலதிபர்கள் புதிய திட்டங்களை செயல்படுத்த தயங்குவதாக கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக ஒரு குழுவை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், பிரதமர் மோடி தமது செயல்களால் நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும், அல்லது அச்சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும் என்றும், பொருளாதாரத்தை மேம்படுத்த ஊக்கச்சலுகைகளை அறிவிக்க வேண்டும் எனவும் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version