அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர் கோயில், இந்திய கலாச்சாரத்தின் நவீன அடையாளமாக அமையம் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். அயோத்தியில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய பிரதமர், ஜெய் ஸ்ரீராம் என்ற மந்திரத்தை உச்சரித்து தனது உரையைத் தொடங்கினார். உலகம் முழுவதும் ஸ்ரீராம் என்ற முழக்கம் ஒலிப்பதாகவும், அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்த பிரதமர், பல்வேறு தடைகளைத் தாண்டி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகக் கூறினார். சராயு நதிக்கரையோரம் பொன்னான வரலாறு படைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நாள் வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள் என்றும் குறிப்பிட்டார். ராமர் கோயில், இந்திய கலாச்சாரத்தின் நவீன அடையாளமாக திகழும் என்று அவர் பெருமிதம் தெரிவித்தார். கம்பராமாயணத்தை மேற்கோள்காட்டி பேசிய அவர், உலகின் பல்வேறு மொழிகளில் ராமாயணம் எழுதப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். ராமர் கோயில் கட்டப்படுவதால் அயோத்தியின் பொருளாதாரம் உயரும் என்று பிரதமர் கூறினார்.
முன்னதாக உரையாற்றிய உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இந்த சிறப்பான தருணத்திற்காக நாட்டு மக்கள் 500 ஆண்டுகள் காத்திருந்ததாகவும், ராமர் கோயில் கட்டுவதற்கான நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளதாகவும் கூறினார். பூமி பூஜை விழாவில், ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவுக்கான நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து பிரதமர் மோடிக்கு கோதண்டராமர் சிலையை, நினைவு பரிசாக உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வழங்கினார்.