நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததையடுத்து பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேல் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பெல்ஜியம் பிரதமராக கடந்த 2014ல் பெல்மிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து பதவியேற்றவர் சார்லஸ் மைக்கேல். அண்மையில் அகதிகள் தொடர்பான ஐ.நா. ஒப்பந்தத்திற்கு மைக்கேல் அளித்த ஆதரவையடுத்து எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக இந்த கூட்டணி முறிந்தது.
இதையடுத்து தனது பெரும்பான்மையை மைக்கேல் கட்சி இழந்ததால், இவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்கட்சிகள் திட்டமிட்டன. இதையடுத்து தன்னுடைய பதவியை மைக்கேல் ராஜினாமா செய்துள்ளார்.
மன்னர் பிலிப்பிடம் அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளார். இந்நிலையில், வரும் மே மாதம் பெல்ஜியத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்பொழுது பிரதமர் பதவி விலகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், இந்த ராஜினாமா குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று மன்னர் இல்லம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.