ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை, மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்வதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்து பேசினார். அப்போது, மத்திய அரசு கண்காணித்து வருவதால், ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு மேம்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஜம்மு காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டவே மத்திய அரசு விரும்புவதாக அமித் ஷா தெரிவித்தார். தேர்தலை ஒத்தி வைக்க தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளதால், ஜம்மு காஷ்மீரில் தற்போது தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்றும், இந்தாண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெறும் என்றும் அமித் ஷா தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் நீட்டிக்கும் மசோதாவிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.