அதிபர் டிரம்ப் வருகை: இருதரப்பு வர்த்தக எதிர்பார்ப்புகள் என்ன?

அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய வருகை பொருளாதார ரீதியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வருகையின் போது பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவோ, அறிவிக்கப்படவோ வாய்ப்புகள் உள்ளன. இந்தியா-அமெரிக்கா ஆகிய இரு தரப்புகளில் உள்ள வர்த்தக எதிர்பார்ப்புகள் என்னென்ன? –
          
1 மோட்டார் சைக்கிள் வரி குறைக்கப்படுமா?
 
அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களுக்கு இந்தியாவில் 100% இறக்குமதி வரி விதிக்கப்படுகின்றது. ஆனால் இந்தியாவில் தயாராகும் மோட்டார் சைக்கிள்களுக்கு அமெரிக்கா வரி விதிப்பதில்லை – என்ற சிக்கலில்தான்
இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவின் முதல் விரிசல் கடந்த ஆண்டில் விழுந்தது. எனவே அமெரிக்க வாகனங்கள் மீதான இந்தியாவின் இறக்குமதி வரி குறைக்கப்படுமா? – என்ற எதிர்பார்ப்பு அமெரிக்காவின் தரப்பில் உள்ளது.
 
2மீண்டும் முன்னுரிமை கிடைக்குமா?
 
இந்தியாவுக்கு அளித்துவந்த ’முன்னுரிமை வர்த்தக நாடு’ – என்ற அங்கீகாரத்தை கடந்த ஆண்டு அமெரிக்கா ரத்து செய்தது. இதனால் சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை அமெரிக்காவுக்கு வரி செலுத்தாமல் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை இந்தியா இழந்துள்ளது. இதனால் முன்னுரிமை வர்த்தக நாடு – என்ற அங்கீகாரத்தை அமெரிக்கா மீண்டும் அளிக்குமா? அல்லது இழப்பை ஈடுசெய்யும் வகையில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படுமா? – என்ற எதிர்பார்ப்பு இந்திய தரப்பில் எழுந்துள்ளது.
 
3 ஈடுசெய்யப்படுமா வர்த்தகப் பற்றாக்குறை?
 
ஒருநாடு இன்னொரு நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மதிப்பைவிட, இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்பு அதிகமாக இருப்பது ‘வர்த்தகப் பற்றாக்குறை’ என்று அழைக்கப்படுகின்றது. கடந்த 2018-2019 நிதியாண்டில் இந்திய வர்த்தகத்தில் அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை 6.9 பில்லியன் டாலர்களாக, அதாவது இந்திய மதிப்பில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 300 கோடி ரூபாயாக இருந்தது.  இதுவும் இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவில் சிக்கல்களை ஏற்படுத்தியது.
 
எனவே இந்த வர்த்தகப் பற்றாக்குறையை சரிசெய்யும் வகையில், பண்ணைப் பொருட்கள், பால் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் ஆகியவற்றை இந்தியாவுக்குக் கூடுதலாக ஏற்றுமதி செய்யும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக
வேண்டும் என்பது அமெரிக்க தரப்பின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 
4 இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகுமா?
 
தகவல் தொழில்நுட்பப் பொருட்கள் உள்ளிட்ட அமெரிக்க தயாரிப்புகளின் மீதான இறக்குமதி வரிகளை இந்தியா குறைக்க வேண்டும் என அமெரிக்காவும், இரும்பு, அலுமினியப் பொருட்கள் உள்ளிட்ட இந்தியப் பொருட்களின் இறக்குமதி வரியை அமெரிக்கா குறைக்க வேண்டுமென இந்தியாவும் எதிர்பார்க்கின்றன.
 
இவை தவிர இருதறப்பு அயல்நாட்டு உறவு, இராணுவ உறவு ஆகியவை குறித்த ஒப்பந்தங்களும் ட்ரம்பின் இந்திய வருகையின் போது கையெழுத்தாக வாய்ப்புகள் உள்ளன.

Exit mobile version