இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பினை வழங்கி உள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேன கடந்த மாதம் 9 ம்தேதி உத்தரவிட்டிருந்தார். முன்னதாக அக்டோபர் மாதம் 26 ம் தேதி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கே நீக்கப்பட்டார்.
அதற்கு பதிலாக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜ பக்சவை புதிய பிரதமராக நியமித்து அதிபர் சிறிசேன நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. மூன்று முறை முயற்சித்தும் நாடாளுமன்றத்தில் ராஜபக்சவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேன கலைத்தது செல்லாது என அறிவிக்க கோரி அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நாடாளுமன்ற கலைப்புக்கு இடைக்கால தடை விதித்து இருந்தது.
இந்த நிலையில் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான வழக்கு நளின் பெரெரோ தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பினை வழங்கியது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது எனவும் அதிபர் சிறிசேன பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதமானது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அதிபர் சிறிசேனவுக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தி உள்ளது.