நாட்டிற்கு சவாலாக உள்ள குடிநீர் பிரச்சினையை கவனத்தில் கொண்டு, ஒவ்வொரு குடிமகனும் நீர் மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
17வது மக்களவை கூட்டத்தொடர் துவங்கியுள்ள நிலையில், கூட்டத்தொடரின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
விவசாயிகள் பயன்பெறும் வகையில் 13 ஆயிரம் கோடியில் நலத்திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும், 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பிரதமரின் நேரடி விவசாய மானியத்தின்கீழ் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் முறையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
எல்லையில் உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், பெண்களின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும், மாநிலங்களின் ஒத்துழைப்போடு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். முத்தலாக் முறை கட்டாயம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளதாகவும் இந்த மசோதாவை நிறைவேற்ற அனைத்து எம்.பிக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தண்ணீர் பிரச்னையை தீர்க்க புதிதாக ஜல்சக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டார். நாட்டிற்கு சவாலாக உள்ள குடிநீர் பிரச்சினையை கவனத்தில் கொண்டு, ஒவ்வொரு குடிமகனும் நீர் மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீரை சேமித்து வைப்பது நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் கடமையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமரின் முத்ரா யோஜனா மூலம் 19 கோடி பேருக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த குடியரசு தலைவர், இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், வேலைவாய்ப்பை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது என்றும் கூறினார்.