40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு காட்சிதரும் அத்திவரதரை தரிசனம் செய்ய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று காஞ்சிபுரம் வருகிறார்.
அத்திவரதரை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் திரள்கிறார்கள். இதுவரை சுமார் 10 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில், அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காஞ்சிபுரம் வருகிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடையும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் செல்கிறார். இன்று மாலை 3 மணியில் இருந்து 4 மணிக்குள் அத்திவரதரை தரிசிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தரிசனத்திற்கு பின் மாலை 5 மணியளவில் சென்னை திரும்பும் அவர், இரவு ஆளுநர் மாளிகையில் தங்கிவிட்டு நாளை காலை ஆந்திர மாநிலத்தில் உள்ள ரேணிகுண்டா புறப்பட்டு செல்கிறார். குடியரசு தலைவர் வருகையால் சென்னை விமான நிலையம் முதல், காஞ்சிபுரம் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.