மகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்துவதற்கு ஆளுநர் பகத்சிங் கோசியாரி பரிந்துரைத்துள்ளார். இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளது.
மகாராஷ்டிரச் சட்டமன்றத் தேர்தலில் பாஜக 105 தொகுதிகளிலும், சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றிபெற்று ஆட்சியமைக்கப் போதுமான பெரும்பான்மையைப் பெற்றன. முதல் இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவியைத் தங்களுக்குத் தர வேண்டும் என சிவசேனா பிடிவாதமாக வலியுறுத்தியதாலும், அதை பாஜக ஏற்காததாலும் அந்தக் கூட்டணி முறிந்து போனது.
இந்நிலையில் 105 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக இருந்த பாஜகவை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் முதலில் அழைப்பு விடுத்தார். இரண்டு நாட்களுக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனக் கெடுவும் விதித்தார். பெரும்பான்மைக்கான ஆதரவைத் திரட்ட இயலாத நிலையில் தங்களால் ஆட்சியமைக்க இயலாது என ஆளுநரிடம் பாஜக தெரிவித்துவிட்டது. இதையடுத்து இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தும் குறித்த காலக்கெடுவுக்குள் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதற்கான கடிதத்தை சிவசேனாவால் அளிக்க இயலவில்லை.
இந்நிலையில் மகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த ஆளுநர் பரிந்துரைத்துள்ளார். இதுபற்றிப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன்படி, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஆட்சியமைக்கப் போதிய கால அவகாசம் வழங்காதது குறித்தும் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரைத்துள்ளதை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் சிவசேனா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக ஏற்று உடனடியாக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.