ஈராக்கில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் போரை நிறுத்துவதற்கு தான் தவிர, போரை தொடங்குவதற்கு அல்ல என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி காசிம் சோலிமானி உட்பட 7 முக்கிய கமெண்டர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் அமெரிக்க நடத்திய இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.. அப்போது பேசிய அவர், ஈரானிய மக்கள் மீது அமெரிக்காவிற்கு எப்போது ஆழ்ந்த மரியாதை உண்டு என்று தெரிவித்தார். ஆனால், நேற்று நடந்த இந்த தாக்குதல் போரை தொடங்குவதற்கு அல்ல என்று கூறிய அவர், அண்டை நாடுகளை சீர்குலைக்க தயாராக இருக்கும் நபர்களுக்கு எதிராக தான் இந்த தாக்குதல் நடைபெற்றதாக விளக்கம் அளித்தார். ஈரான் ராணுவத் தளபதி காசிம் சோலிமானி, அமெரிக்க ராஜதந்திரிகள் மற்றும் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும், அது தற்போது முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.