விருப்பத்தின் அடிப்படையில் ஆதாரை பயன்படுத்த அனுமதிக்கும், ஆதார் மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா 2019-க்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். விருப்பத்தின் அடிப்படையில் ஆதாரை பயன்படுத்த அனுமதிக்கும் மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சட்ட வடிவு பெறுவதற்கான ஒப்புதலை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அளித்துள்ளார். இதன் மூலம், ஆதார் எண்ணை அடையாள ஆவணமாக பயன்படுத்திக் கொள்வதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட நபரிடம் அனுமதி பெற வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆதார் எண்களை பயன்படுத்தி தனி நபர்களின் ரகசியங்களை திருடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க சட்டம் வழிவகை செய்கிறது. ஆதார் எண் அளிப்பது கட்டாயம் என்பதற்கு பதிலாக, விருப்பத்தின் பேரில் வழங்கலாம் என்று டெலிகிராப் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. வங்கி கணக்கு தொடங்க ஆதாரை கட்டாயமாகக் கருதக் கூடாது. பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை பெற்றுக் கொள்ளலாம் என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் இல்லை என்பதற்காக, எந்தவொரு வாடிக்கையாளருக்கும் சேவை மறுக்கக் கூடாது என்றும், இதனை மீறினால், சம்பந்தப்பட்ட வங்கிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நாளொன்றுக்கு 10 லட்சம் முதல் ஒரு கோடி வரை அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.